Friday, July 24, 2009

சிந்திக்கவைக்கும் சிறுகதைகள்

ரெமிங்டன் டைப்ரைட்டர், மர்பி ரேடியோ, ஆடியோ கேசட் வரிசையில் இன்று சிறுகதைகளும் காயலான்கடைக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இன்று அது 20/20 கிரிக்கெட் போல ஒரு பக்கம், அரைப்பக்கமாகச் சுருங்கிவிட்டது. ஒரு மினிகாபி சாப்பிடுவதைப்போல அந்தக் கதைகள் ஒரு கணநேரம் உங்கள் கவனத்தை ஈர்த்துவிட்டு மாயமாகிவிடுகின்றன. வாசகர்களுக்கும் நிதானமாகப் படித்து அசைபோட நேரம் கிடைப்பதில்லை. பத்திரிக்கைகளுக்கும் பொறியியல் கல்லூரி, கல்கி பகவான், மூட்டுவலி மருத்துவர், போத்தீஸ் உங்கள் கஜானாவைக் கைப்பற்றிய விளம்பரங்கள் போக போனால் போகிறது என்று அத்திபூத்தாற்போல் ஒரு சிறுகதை மட்டுமே வெளியிட இடம் இருக்கிறது.

இணையம் மட்டுமே இன்று எல்லா விஷயங்களுக்கும், ரசனைகளுக்கும் இடம் தருகிறது. அதுமட்டுமன்றி பின்னூட்டம், விவாத அரங்குகள் போன்ற சாதனங்கள் மூலமாக உடனுக்குடன் கருத்துக்களை மின்னல் வேகத்தில் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. நாம் பகிர்ந்துகொள்ள நினைத்த விஷயங்களைப் பதிவுசெய்துவிட்டால் மட்டும் போதும். அது எப்படியாவது ஒரு நாள் அதற்குத் தகுந்த வாசகர்களைத் தேடிச்சென்று அடைந்துவிடுகிறது. இந்த எண்ணத்தில்தான் என்னுடைய ஐந்தாவது வலைத்தளமாக இது வலம் வருகிறது.

இது சிறுகதைகள் மட்டுமே பரிமாறப்படும் ஓர் உணவகம். இங்கு பல்சுவையான உணவுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. பாயசமும் உண்டு. பாகற்காயும் உண்டு. எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை உங்கள் நினைவில் நிற்கும். உங்களைச் சிந்திக்கவைக்கும். இங்கு நீங்கள் செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இதில் சில கதைகள் நான் பிற மொழிகளில் படித்த கதைகளின் தாக்கங்களாக இருக்கலாம். ஆனால் அது டப்பிங் படம் மாதிரி உதட்டசைவுக்கு ஒத்ததாக எழுதப்பட்ட வசனங்களாக இல்லாமல் அதன் உண்மையான தாக்கத்தை உள்வாங்கி அதன் ஆழத்தை மட்டும் வெளிப்படுத்தும் கதைகளாக இருக்கும். வால்மீகி இராமாயணத்தைக் கம்பர் மூலம் படிக்கும்போது நாம் வேறு ஒரு முழுமையான உணர்வைப் பெறுவதில்லையா?(கம்பதாசர்கள் பொறுத்தருள்க! )ஆனால் ஒரு கதை முழுமையாக எடுத்தாளப்பட்டிருக்கும்பொழுது அதன் மூலத்தை வெளிப்படுத்துவதுதான் நாகரீகம் என்று கருதி அதன் மூலத்தையும் தேவைப்பட்ட இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தத் தளத்தில் வெளியிடவுள்ள அநேக சிறுகதைகள் ஏற்கெனவே என் மனதில் முழுவடிவம் பெற்றுவிட்டாலும் நேரம் வாய்க்கும்பொழுது அந்தக் கதைகள் வெளிவரும். எனவே தாங்கள் இதன் செய்தியோடையைப் பதிவுசெய்துகொண்டு இந்தத் தளத்தின் பதிவுகளைப் படித்துத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

2 comments:

சென்ஷி said...

:-)

எதிர்பார்க்கின்றோம்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment