+2 முதல் நாள், முதல் வகுப்பு. தலைமை ஆசிரியர் வந்து சில சம்பிரதாய வார்த்தைகளைப் பேசிவிட்டு மணிமேகலை டீச்சர்தான் உங்கள் வகுப்பு ஆசிரியர் என்று அறிவித்துவிட்டுச் சென்றார். அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மாணவ, மாணவிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். யார் முகத்திலும் ஈயாடவில்லை. அப்படி ஒரு நிசப்தம்.
நாமக்கல் வட்டாரத்தில் எந்தக் கிராமத்திலும் ஓரு குழந்தையின் அழுகையை நிறுத்தவேண்டும் என்றால் "இரு, மணிமேகலை டீச்சரிடம் சொல்லி உன்னைக் கவனிக்கச் சொல்கிறேன்" என்றுதான் சொல்லுவார்கள். எந்த ஒரு அடங்காத கழுதையும் அந்த டீச்சரைப் பார்த்தால் கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிடும். டீச்சர் கையில் வைத்திருக்கும் பிரம்பைப் பார்த்துவிட்டால் அந்த இடத்திலேயே ஒன்றுக்குப் போய்விடும்.
மணிமேகலை டீச்சர் வகுப்பு எடுக்கிறார் என்றால் மணி அடித்தவுடன் அத்தனை மாணவ, மாணவிகளும் இராணுவ வகுப்பில் கலந்துகொள்ளும் வீரர்களைப்போல விறைப்பாக உட்கார்ந்து இருப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐயாக இருந்து பேட்டை ரவுடிகளைப் பெண்டு எடுத்த அனுபவத்துடன் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு ஆசிரியர் அவதாரம் எடுத்தவர். வகுப்பறைக்குள் நுழையும் டீச்சரைப் பார்க்கும்போது இன்று யாருக்கு முதல் அடிவிழும் என்று ஒவ்வொருவரும் மனதிற்குள்ளேயே நடுங்கிக்கொண்டிருப்பார்கள்.
"டேய், மருது! இங்கே வாடா"
பயத்தில் நடுங்கிக்கொண்டே மருது அருகில் போவான். அவன் கை அவன் அறியாமலேயே டீச்சரை நோக்கி நீளும். சுளீரென்று விழும் ஒரு அடியில் ஒரு விநாடி அவன் மூளையில் ஒரு மின்னல் போல ஷாக் அடிக்கும். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அடுத்த அடிக்காக இன்னொரு கையை நீட்டவேண்டும். அதுதான் மணிமேகலை டீச்சர் ஏற்படுத்திவைத்திருக்கும் சட்டம். இரண்டு அடிகளும் நீங்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை ஞாபகப்படுத்தும். சரி, அடித்த காரணம்?
"ஏண்டா மூதேவி. +2 படிக்கிறோமே என்கிற அறிவு உனக்கு இல்லையா? கணக்கில போய் 80 மார்க்குதான் எடுத்திருக்கே. இதை வைச்சுக்கிட்டு நீ எருமைநாயக்கன்பட்டியிலே போய் பண்ணிதான் மேய்க்க முடியும். அடுத்த டெஸ்டுலே 90க்குக் கீழே வாங்கினால் நீ பப்ளிக் பரீட்சையே எழுதிக்கிடமாட்டே!"
80 மார்க் எடுத்ததற்கு இப்படி ஒரு அடியா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று அர்த்தம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலேயே +2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் மிக அதிக மதிப்பெண்கள் வாங்குவது இங்கேதான். ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று மஞ்சள் பையிலிருந்து எண்ணிக்கொடுத்துவிட்டு எப்படியாவது என் மகனை மருத்துவக்கல்லூரியிலோ, அரசு பொறியியற்கல்லூரியிலோ இடம் கிடைக்குமளவு மார்க் எடுக்க வைத்துவிடுங்கள் என்ற ஒரே கோரிக்கையோடு தங்களுடைய அருமைப்புதல்வர்களை இங்கு ஒப்படைத்துவிட்டு அவர்களுடைய பெற்றோர் ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அன்றிலிருந்து ஒரு ரிங் மாஸ்டரின் லாவகத்துடன் அந்த மாணவர்களின் இளமைத்துள்ளல்களைத் தங்கள் பிரம்பால் சொடுக்கிப் பெட்டிப்பாம்பாக அவர்களைப் படியவைத்துப் படிக்கவைத்துவிடுவார்கள்.
அந்தப் பள்ளியின் சட்டதிட்டங்கள் கடுமையானவை. ஐந்து நிமிடம் பள்ளிக்குத் தாமதமாக வந்தால் மைதானத்தில் ஒரு வகுப்பு முடியும்வரை வெயிலில் மண்டியிட்டு இருக்கவேண்டும். வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துவிட்டால், எழுதாமல் விட்ட பாடத்தை நாற்பது முறை இம்பொஸிஷன் எழுதவேண்டும்.
சகமாணவனிடம் கிசுகிசுத்தால் வகுப்பறைக்கு வெளியே நிற்க வேண்டும். அவ்வாறு நிற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் உடற்பயிற்சி ஆசிரியர் வந்து தனித்தனியாகக் கவனிப்பார். ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் தனியே பேசுவதைப் பார்த்துவிட்டால் அந்த மாணவனின் தோலை உரித்துத் தொங்கப்போட்டுவிடுவார்கள்.
அதுவும் மணிமேகலை டீச்சரைப் பார்த்தால் இன்றைய மாவட்ட ஆட்சியர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள்வரை கைகட்டி நிற்பார்கள். ஏனென்றால் அவர்களோ அவர்களது குழந்தைகளோ அவருடைய மாணவர்களாக இருப்பார்கள் அல்லது இருந்திருப்பார்கள். ஆனால் சீனியர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்: "நீ மணிமேகலை டீச்சரிடம் படிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்" என்று. டீச்சர் அந்த அளவுக்கு அற்புதமாகப் பாடம் நடத்துவார். பெயருக்குத்தான் அவர் ஆங்கில ஆசிரியர். கணிதம், பௌதிகம், வேதியல் என எந்தப் பாடத்தையும் அழகாக நடத்துவார். எவ்வளவு சிக்கலான கணக்கையும் மிகவும் எளிய முறையில் வகுப்பின் கடைசி மதிப்பெண்பெறும் மாணவனுக்கும் புரியும் அளவுக்கு நிதானமாகவும், தெளிவாகவும் நடத்துவார். ஆனால் ஏதாவது ஒரு மாணவனோ, மாணவியோ தான் பாடம் நடத்தும்போது கவனக்குறைவாக நடந்துகொள்வதைப்போல் தென்பட்டால் அடுத்த விநாடியே பின்னி எடுத்துவிடுவார். குறைந்தது இரண்டு நாட்களுக்கு அந்த மாணவனோ மாணவியோ சரியாகச் சாப்பிடமுடியாது.
மணிமேகலை டீச்சர் முதலில் அட்டெண்டன்ஸ் எடுத்தார். பட்டியலில் ஒரு மாணவன் குறைந்தது.
"எங்கே சூர்யா?"
யாரும் பதில் பேசவில்லை. வகுப்பறையின் வாசலில் நிழலாடியது. சூர்யா!
முதல் நாள், முதல் வகுப்பிற்கே தாமதமாக வருகிறான். அதுவும் மணிமேகலை டீச்சர் வகுப்பிற்கு. என்ன ஒரு கொழுப்பு!
அந்தக் கொழுப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதலமைச்சரின் நிழலாக ஒட்டிக்கொண்டே இருக்கக்கூடிய அமைச்சர் பழனிவேலுதான் அவன் தந்தை. அவர் கண்ணசைந்தால் நாமக்கல் மாவட்டக் கலெக்டர் அடுத்த நாளே கன்னியாகுமரிக்கு மாற்றலாகி ஓடவேண்டியிருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவனுக்குத் தனியாக டியூஷன் வாத்தியார் இருக்கிறார். ஆனால் எந்த மாதத்து பிராகரஸ் ரிப்போர்ட்டிலும் அவன் சிகப்புக்கோடு வாங்காமல் இருந்ததே இல்லை. அவனுக்குப் படிப்பில் துளியும் ஆர்வம் கிடையாது. கிரிக்கெட் விளையாடுவதில்தான் அவனுடைய முழுக்கவனமும். சென்னையில் மேட்ச் நடக்கிறது என்றால் அவன் கூலாகப் பறந்துவிடுவான். அவனைக் கேள்வி கேட்கும் தைரியம் அந்தப் பள்ளியில் யாருக்கும் இல்லை. இப்போதும்கூட அவன் அந்தப் பள்ளியின் பிற மாணவர்களைப் போல ஒழுங்காக வரவில்லை. தலையெல்லாம் கலைந்து ஏதோ ஒரு மைதானத்திலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்ததுபோல் தோன்றியது.
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி திறக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மணிமேகலை டீச்சரையும், தலைமை ஆசிரியரையும் அமைச்சர் தன் வீட்டுக்கு அழைத்தார்.
"டீச்சர்! என் மகனைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவன் மற்ற பையன்களை மாதிரி 95, 98ன்னு எடுக்காவிட்டலும் குறைஞ்சது அவன் பாஸ் மார்க்காவது எடுக்கணும். அதுக்கு நீங்க எந்த முயற்சி எடுத்தாலும் நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன். சந்தேகம் இருந்தா எழுதியே கொடுக்கிறேன். நானும் அவன் அம்மாவும் அவனுக்கு செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டோம். நீங்க மனசு வைச்சா அவனை ஒரு சாதாரண மாணவனா மாற்றமுடியும். அதுக்காக உங்களுக்கோ உங்க ஸ்கூலுக்கோ நான் என்னவேணாலும் பண்றதுக்கு ரெடியா இருக்கேன்."
இப்படி ஒரு சுதந்திரத்தை அந்த மந்திரி தங்களுக்கு வழங்குவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மந்திரியிடம் எப்படி நல்ல பெயர் எடுத்துத் தங்கள் பள்ளியின் மானத்தைக் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டுதான் கலைந்து சென்றார்கள். சொல்லிவைத்தாற்போல் இப்படி முதல் நாளே தாமதமாக வந்து மானத்தை வாங்குகிறான்.
சூர்யாவிற்கு மணிமேகலை டீச்சரின் மகிமை நன்றாகவே தெரியும். அப்பாவும் அவனைக் கடுமையாகவே எச்சரித்திருக்கிறார். அடுத்து நடக்கப்போகும் பட்டாபிஷேகத்திற்கு அவன் மனதளவில் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். குறைந்தது நான்கு அடிகளாவது நிச்சயம் என்று எண்ணிக்கொண்டே டீச்சரின் அருகில் சென்றான்.
இதுதான் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய தருணம் என்று மணிமேகலை டீச்சர் நினைத்தார். மந்திரி மகனுக்குக் கிடைக்கும் பூசையைப் பார்த்து ஒவ்வொரு மாணவனும், மாணவியும் நடுங்கவேண்டும். அந்தப் பயத்திலேயே அவர்கள் தூக்கம் பறக்கவேண்டும். அப்படியும் அவர்கள் தூங்கிவிட்டால் இவன் அடியால் துள்ளிய காட்சி கனவாக வந்து அவர்கள் கண்விழித்துப் படிக்கவேண்டும். அவர் பிரம்பை எடுத்து லேசாகத் தடவிக்கொடுத்தார்.
சட்டென்று அசரீரி போல் அவர் மனதில் ஒரு மின்னல் மின்னியது. இருபத்தியெட்டு வருடங்கள் ஒரு சர்க்கஸ் ரிங்மாஸ்டரைப் போல் வாழ்க்கை நடத்தியாகிவிட்டது. ஏன் மறுபடியும் இந்த ராட்சஷ வேஷம்? ஒரு முறையாவது மாற்றி யோசித்தால் என்ன?
மளமளவென்று அவர் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அதனை உடனே செயல்படுத்தும் துணிச்சலும் வந்தது.
"சூர்யா! நாம் இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா?"
சூர்யா விழித்தான். என்ன இது? ஒப்பந்தமா? அதுவும் இரு துருவங்களுக்கிடையிலா?
மணிமேகலை டீச்சர் தொடர்ந்தார்.
"கடந்த இருபது வருஷமா இந்த ஸ்கூல்ல யாரும் பெயிலானது கிடையாது. மாநில அளவிலே வருஷாவருஷம் ரேங்க் வாங்கி எத்தனையோ பேர் இந்த ஸ்கூலுக்கு அவார்டு வாங்கிக்கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட ஸ்கூல் உன்னாலே தலைகுனியக்கூடாது. நீ நினைச்சா நிச்சயம் நல்லாப் படிக்கமுடியும். அதுக்குத்தேவையான எல்லா உதவியையும், எந்த நேரத்திலேயும் உனக்குச் செய்வதற்கு நான் காத்துக்கொண்டிருப்பேன். ஆனால் அதுக்கு முன்னால் நீ மாறணும். உன்னோட விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டிவைச்சுட்டு நீ படிப்பிலே மட்டும் கவனம் செலுத்தணும். அப்படி நீ மாறிட்டேன்னா நானும் மாறிவிடப்போறேன். ஆமாம், சூர்யா! நீ மட்டும் நல்லாப் படிக்க ஆரம்பிச்சு நல்ல மார்க் வாங்கினேயானால் நான் உன்னை மட்டுமில்லே, இந்த ஸ்கூல்ல எந்த மாணவனையோ, மாணவியையோ கை நீட்டி அடிக்கமாட்டேன். திட்டக்கூடமாட்டேன். ஊருக்கு அடங்காத பிள்ளைன்னு நீ பெயர் வாங்கியிருக்கே. ராட்சஸின்னு நான் பெயர் வாங்கியிருக்கேன். நாம் இரண்டு பேரும் மாறிவிட்டா நம் ரெண்டு பேருக்குமே நல்லது இல்லையா? இதுதான் நம் டீல். என்ன சொல்றே?"
அந்த வகுப்பே அதிர்ந்து போனது. சூர்யா மட்டும் நன்றாகப் படித்தால் மணிமேகலை டீச்சரிடம் யாருமே அடி வாங்கமாட்டார்கள்! எவ்வளவு அழகான ஒப்பந்தம்!
"இந்த வகுப்பிலே இருக்கிற எல்லோருக்கும் சொல்றேன். சூர்யா இனிமே உங்க கையிலே. அவன் மட்டும் திருந்தி நல்லாப் படிச்சுட்டான்னா நான்
பிரம்பை ஒடிச்சுக் குப்பையிலே போட்டுவிடுவேன். ஆனால் இதை சாதகமா எடுத்துக்கிட்டு யாராவது வாலாட்டினீங்கன்னா என்னோட நடவடிக்கை இதைவிடக் கடுமையா இருக்கும். இது சூர்யாவுக்காக நான் எடுத்த முடிவு இல்லை. உங்க எல்லோருக்காகவும் நான் எடுத்த முடிவு."
சூர்யா மௌனமாகத் தன் இருக்கையில் அமர்ந்தான். அன்று மணிமேகலை டீச்சர் இரண்டு வகுப்புகள் எடுத்தார். இரண்டு வகுப்புகளிலும் பிரம்பைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்படியானால் ஒப்பந்தத்தின் தன்னுடைய பங்கை மணிமேகலை டீச்சர் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். இப்பொழுது சூர்யா என்ன செய்யப்போகிறான்?
பெல் அடித்ததும் எல்லா மாணவர்களும் சூர்யாவைச் சூழ்ந்து கொண்டனர். அவனுடைய நாடியைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.
"டேய் சூர்யா! நாங்க அடி வாங்காமல் தப்பிக்கிறது உன் கையிலேதாண்டா இருக்கு. எப்படியாவது படிச்சு எங்க உயிரைக் காப்பாற்றுடா! போன வருஷம் புறங்கையிலே அடி வாங்கினதே இன்னும் நாலு வருஷத்துக்கு வலிக்கும் போலிருக்குடா. வேணும்னா தினசரி உங்க வீட்டுக்கு யாராவது ஒருத்தர் ஜாயிண்ட் ஸ்டடிக்கு வாரம்டா. உனக்கு எந்தப் பாடத்திலே எந்த சந்தேகம் வந்தாலும் சொல்லு. நாங்க சொல்லிக்கொடுக்கிறோம்."
சூர்யாவின் உள்ளம் பரபரத்தது. அந்த வகுப்பின் முழுக்கவனமும் ஒரு ஒளிவட்டமாகத் தன்மீது குவிந்ததைப் பார்க்கும்பொழுது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. இதில்மட்டும் ஜெயித்துவிட்டால் அந்தப் பள்ளிக்கே அவன் ஹீரோ! தான் விளையாட்டில் எதிர்பார்த்த பெயரும் புகழும் படிப்பிலேயே கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அவன் இதுவரை தன்னுடைய படிப்பைப் பற்றியோ அதற்குப்பின் வேலைக்குப் போவதைப் பற்றியோ ஒரு நாளும் நினைத்துப் பார்த்தது கிடையாது. எப்படியும் அப்பாவின் புண்ணியத்தில் கட்சியில் இளைஞரணித் தலைவர் பதவி கிடைத்துவிடும். அதற்குப் பிறகு அப்பா மாதிரி அனைத்து அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் ஒரு ஆட்டு ஆட்டித் தான் நினைத்த காரியங்களைச் சாதித்துவிடலாம் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது. அதேவழியில் அப்பாவுக்குத் தெரியாமல் மணிமேகலை டீச்சரையும் வழிக்குக் கொண்டுவர அவனுக்கு வழி தெரியும். ஆனால் இந்த மாதிரி ஒரு தனிவழியில அவர் தன்னைக் கிளீன் போல்டு செய்துவிடுவார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
உச்சகட்டமாக அன்று இரவு அவனுக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எப்போதும் அவனை முறைத்துக்கொண்டு போகும் அய்யர்வீட்டு விமலாதான் அனுப்பியிருந்தாள்.
"டேய் சூர்யா! நீ மட்டும் அடுத்த பரீட்சையில் அறுபதுக்குமேல் வாங்கிவிட்டால் யாருக்கும் தெரியாமல் உனக்கு ஒரு முத்தம் தருகிறேன்!"
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கை அவனுக்குச் சிறிதும் இல்லை. ஆனால் அவன்மேல் எல்லோருக்கும் இருக்கும் அக்கறை இப்போது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. காரணம் அந்த மணிமேகலை டீச்சர். இப்போது என்ன செய்வது. பேசாமல் படித்துத் தொலைத்துவிடவேண்டியதுதான்!
மறுநாள் காலை முதல்முறையாக ஆறு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தான். அதிகாலையில் படிப்பது ஓர் இனிமையான அனுபவமாகத் தோன்றியது. படித்தது ஸ்டிக்கர் மாதிரி மனதில் ஒட்டிக்கொண்டது. கிரிக்கெட்டைவிட இந்த கேம் எளிதாக இருக்கும்போலவே தோன்றியது. மறுநாள்
பள்ளிக்கு வந்தவுடன் அத்தனை மாணவர்களும் அவனை ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்று அவன் படித்த பாடங்களை ஒப்பிக்கச் சொன்னார்கள். எங்காவது தவறு இருந்தால் திருத்தினார்கள்.
சூர்யாவைப் போலவே மணிமேகலை டீச்சரும் முழுவதுமாக மாறிவிட்டார். அவர் கையில் இருந்த பிரம்பு மாயமாக மறைந்துவிட்டது. கேட்ட கேள்விகளுக்கு யாராவது மிகவும் நன்றாகப் பதிலளித்தால் பேனா, ஸ்கேல் என்று பரிசளித்தார். எல்லாம் அவர் கைக்காசு. எத்தனை முறை தவறாகச் சொன்னாலும் பொறுமையுடன் திரும்பத் திரும்ப ஒப்பிக்கச் சொல்லித் திருத்தினார். இதன்மூலம் பாடங்கள் அந்த மாணவனுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் மனதில் நன்கு பதிந்தன.
இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்தது.
"ஏன் டீச்சர் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீங்க. இதை சாதகமாக எடுத்துக்கிட்டு யாராவது பெயிலாப் போயிட்டா அப்புறம் நம் பள்ளியோட பெயர் கெட்டுவிடும்" என்று எச்சரித்தார்கள். ஆனால் மணிமேகலை உறுதியாக இருந்தார்.
காலாண்டுத் தேர்வு முடிவுகளை அந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். குறிப்பாக சூர்யாவின் விடைத்தாள்களை சீனியர் ஆசிரியர்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பார்த்தார்கள். இதுவரை அவர்கள் பார்த்த சூர்யாவிற்கும், இப்போது இருக்கும் சூர்யாவிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதுபோல் தோன்றியது. அனைத்து பாடங்களிலும் அறுபது சதவீதத்திற்குமேல் வாங்கியதோடு சில கேள்விகளுக்கு மிகவும் புதுமையாகப் பதிலளித்திருந்தான். தாங்கள் இதுவரை அவனைச் சரியாகக் கணிக்கவில்லையோ என்று சந்தேகப்பட்டார்கள்.
தலைமை ஆசிரியருக்கு இப்போதுதான் மணிமேகலை டீச்சர் முயற்சியில் நம்பிக்கை வந்தது. சூர்யாவுக்காக ஸ்பெஷல் டீம் ஒன்று ஏற்பாடு செய்தார். அவர்களிடம் தினமும் அவன் ரிப்போர்ட் செய்யவேண்டும். அவர்கள் அவனைத் தினமும் தேர்வு எழுதவைத்து மறுநாளே திருத்திக்கொடுத்து இன்னும் அதைச் சிறப்பாகச் செய்வதற்கு ஆலோசனை கொடுத்தார்கள். பள்ளியிலேயே உணவு மருத்துவர்களின் ஆலோசனைப்படி பானங்கள், சத்து மிகுந்த பிஸ்கெட்டுகள் பள்ளியின் செலவிலேயே வாங்கிக்கொடுக்கப்பட்டன. ஒரு பந்தயக்குதிரையைத் தயார்செய்வதைப்போல் அவன் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்பட்டான்.
பொதுத்தேர்வு முடியும்வரை இந்த அணுகுமுறை தொடர்ந்தது. எல்லா ஆசிரியர்களும் மாணவர்களைத் தங்களுடைய கைபொம்மைகளைப்போல் நடத்தாமல் அவர்களைத் தங்கள் வழிகளிலேயே படிப்பதற்கு அனுமதித்தனர். அவர்கள் தங்களை எளிதில் அணுக ஊக்குவித்தனர். ஒரு நல்ல வழிகாட்டியாகவும், நண்பனைப்போலவும் மட்டுமே நடந்துகொண்டார்கள்.
இந்த நடவடிக்கைகளைக் கேள்விப்பட்ட இதுபோன்ற போர்டிங் பள்ளிகள் ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். மணிமேகலை டீச்சருக்குப் "பல்லாண்டு வாழ்க எம்.ஜி.ஆர்" என்று கிண்டலாகப் பெயர் வைத்தார்கள். இனிமேல் அந்தப் பள்ளியின் வருமானம் போய்விடும். தங்களுடைய பள்ளியின் கல்லா களைகட்டும் என்று நினைத்தார்கள். அந்தப் பள்ளியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட நினைத்தார்கள். பொதுத்தேர்வின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
அன்று பகல் 12மணிக்கு சட்டசபையில் அமைச்சர் பழனிவேலு எதிர்கட்சியினரின் கேள்விகளுக்குக் காரசாரமாகப் பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒரு சேவகர் வேகமாக வந்து முதலமைச்சரிடம் ஒரு சீட்டைக்கொடுத்தார். அதைப் படித்தவுடன் முதலமைச்சர் புன்முறுவலுடன் எழுந்தார்.
"கொஞ்சம் உட்காருய்யா. நான் ஒரு முக்கியமான அறிவிப்பு செய்யணும்" என்று சொல்லி அமைச்சரை அமருமாறு கேட்டுக்கொண்டார்.
"கொஞ்சம் பொருங்கள். நான் இன்னும் இரண்டு நிமிடத்தில் முடித்துவிடுகிறேன்" என்று அமைச்சர் கெஞ்சினார்.
"அட உட்காருய்யான்னா.. " அவரை அதட்டி உட்காரவைத்துவிட்டு முதலமைச்சர் தன் அறிவிப்பைத் தொடர்ந்தார்.
"ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன். இந்தச் செய்தியைச் சொல்லிமுடித்தவுடன் அனைத்துக் கட்சி நண்பர்களும் கட்சி வேறுபாடு இன்றிக் கரகோஷம் செய்து நண்பர் பழனிவேலு அவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து இப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. நண்பர் பழனிவேலுவின் மகன் சூர்யா நடந்து முடிந்த +2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்"
Inspired by "The Potter and the Clay" by Ellaeenah from "Chicken Soup for the Indian Soul"
24/07/2009
American Ultra (2015)
8 years ago
No comments:
Post a Comment