Thursday, July 16, 2009

முக்தி

அடர்ந்த கானகத்தின் நிசப்தத்தைத் துயில் எழுந்த பறவைகளின் ஒலிகள் லேசாகக் கலைத்தன. ஆத்மானந்தர் ஒரு புன்னகையுடன் கண் மலர்ந்தார். எழுந்தவுடன் முதல் சிந்தனையாகக் காயத்ரி மந்திரத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் உணர்ந்து ஜெபித்தார். இன்னும் இருட்டு கலையாத காலைப்பொழுதில் அருகிலிருந்த நீரோடைக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டுக் கிழக்கு நோக்கித் திரும்பி சூர்யநமஸ்காரம் செய்தார். அப்போது அம்பாளின் உச்சித்திலகமாக ஓர் ஒளிப்பிழம்பு உதித்ததைக் கண்டு மெய்சிலிர்த்தார். எத்தனையோ லட்சம் மைல்களுக்கப்பால் இருக்கும் சூரியன் இந்தப் பூமியில் வசிக்கும் கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஆதாரமாக இருப்பதைப் போல, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில் தன்னுடைய ஜீவன் கட்டுண்டு கிடப்பதை எண்ணும்பொழுது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நாளை முதல் இந்த சூரியனைக் காண இயலாது என்பதுடன் இந்த வாழ்க்கையே தனக்கு அந்நியமாகிவிடும் என்ற எண்ணம் இன்னும் விநோதமாக இருந்தது. ஆம், இன்றுதான் அவருடைய கடைசி நாள்.

ஆத்மானந்தர் ஒரு தெய்வப்பிறவி. ஐந்து வயதிலேயே இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இறைவன் நாமத்தை ஜெபிப்பதைத் தவிர
வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுப்பதில்லை. அத்துடன் முக்தியொன்றே குறியாகக்கொண்டு தவம் இருக்கும் சித்தர்களைத் தேடியலைந்து அஷ்டமாசித்திகளும் கைகூடும் வரம்பெற்றார். வேதபாடசாலைகளில் குருகுல வாழ்க்கையை மேற்கொண்டு குருவிற்குப் பணிவிடை செய்து நான்கு வேதங்களையும் நன்கறிந்தார். உபநிஷத்துகள், புராணங்கள், பாகவதங்கள் அனைத்திலும் பாண்டித்யம் பெற்று அவற்றைப் பற்றி மணிப்பிரவாளமாகப் பல மணி நேரம் உரையாற்றும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

அவருடைய உரைகளைக் கேட்ட மக்கள் மலரில் மயங்கும் வண்டுகளைப் போல் மயங்கிக்கிடந்தார்கள். அவரை நேரில் தரிசிப்பதற்கும், ஆசீர்வாதம் பெறுவதற்கும் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள். பல நாட்டு மன்னர்களும் அவருடைய ஆசிரமத்தில் பணிவிடைகள் செய்வதைப் பாக்கியமாகக் கருதினார்கள். பவளம்போல் ஜொலிக்கும் அவருடைய கண்பார்வை பட்டவுடன் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள்.
அவருடைய பல்லக்கைச் சுமந்ததாலேயே தங்கள் பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்று பலர் எண்ணினார்கள். மொத்ததில் அவர் தெய்வத்தின் திருவுருவமாக வழிபடப்பட்டார்.

ஒரு நாள் மகதநாட்டு மன்னனின் மகள் விஷப்பாம்பு கடித்து மயங்கிக்கிடந்தாள். அவள்மீது உயிரையே வைத்திருந்த மன்னன் வேதனையில் கத்திக் கதறினான். அவனுடைய அமைச்சர்கள் ஒரே குரலில் ஆத்மானந்தர்தான் அவளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தீர்மானமாகச் சொன்னார்கள். மன்னன் மின்னல் வேகத்தில் அவருக்குத் தூதுவிட்டான். ஆத்மானந்தர் தான் சித்தர்களிடம் கற்று அறிந்திருந்த அபூர்வ மூலிகைகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்துக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார். அந்த மூலிகைகளின் சாற்றை மயங்கிக்கிடந்த மன்னனின் மகளின் வாயில் ஊற்றச்சொன்னார். கணப்பொழுதில் இளவரசிக்கு நினைவு திரும்பியது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அரண்மனைக்கு வந்து விஷத்தின் பாதிப்பு
முற்றிலும் நீங்கும் பொருட்டு இன்னும் சில மருந்துகளை அளித்தார்.

பாம்பின் விஷத்தின் பிடியிலிருந்து தப்பிய இளவரசிக்கு வெறொரு விஷம் தலைக்கேறியது. ஒளி வீசும் ஆத்மானந்தரின் தோற்றத்தில் மயங்கி அவரிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்தாள். இரவும், பகலும் அவருடைய நினைவு அவளை வாட்டி எடுத்தது. மணந்தால் அவரைத்தான் மணப்பேன் என்றும், அவர் மறுப்பு தெரிவித்தால் தீக்குளிப்பேன் என்றும் மன்னனிடம் தெரிவித்தாள். தகவல் அறிந்த ஆத்மானந்தர் அனலில் பட்ட மெழுகாகத் துடித்தார். தன்னுடைய வாழ்க்கையை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டதாகவும், இல்லற வாழ்க்கையை ஒருபொழுதும் தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தன்னுடைய மகளின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்த மன்னன் அவரிடம் முடிந்த அளவு கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை. அவர் உறுதியாக மறுத்துவிட்டதை அறிந்தததும் கோபத்தில் அவரைச் சிறையிலடைத்துச் சித்ரவதை செய்தான். அவர் சிறையில் வாடுவதை அறிந்த சில அறிஞர்கள் அவரிடம் வந்து மன்னனின் கட்டளைக்கு அடிபணிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றும், இறைவனே துணைவியருடன் அருள்பாலிக்கும்போது பேரழகியான மன்னனின் மகளை ஏற்றுக்கொண்டு இறைபணியைத் தொடருவதில் தவறில்லை என்றும் அறிவுறுத்திப் பார்த்தனர். ஆனால் ஆத்மானந்தர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனளிக்காத காரணத்தால் தன்னுடைய அமைச்சர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கிணங்கி மன்னன் அவரைச் சிறையிலிருந்து விடுவித்தான்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் அவருடைய புகழ் மேலும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக அவரைத் தேடிவந்தனர். பெருகிவரும் அவருடைய செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள இயலாத அந்த நாட்டின் மதகுரு அவர்மேல் மதத்துவேஷ குற்றம் சாட்டினார். அரசவையில் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவருடைய வியக்கத்தக்க சித்திகளுக்குக் காரணம் அவர் துஷ்டதேவதைகளை வழிபடுவதே என்று அவர்மீது குற்றம் சாட்டினார். அப்போது நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சத்திற்கு இத்தகையவர்களின் கை ஓங்கியிருப்பதுதான் காரணம் என்று அழுத்தமாகச் சொன்னார். ஆத்மானந்தரைக் கழுவிலேற்றிக் கொல்லும்படி மன்னனுக்கு உத்தரவிட்டார்.

அவரது வாதங்களை அமைதியாகக் கேட்ட ஆத்மானந்தர் மதகுருவின் வாதங்களைக் கண்ணியமாக மறுத்தார். குறிப்பாக நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கு இயற்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மனிதனின் அறிவின்மையே காரணம் என்று எடுத்துரைத்தார். மன்னன் ஆணையிட்டால் தான் விரதம் இருந்து வருணஜெபம் செய்து மழையை வருவிக்க இயலும் என்று பணிவுடன் கூறினார். மன்னனும் அவர் கூற்றுப்படி இன்னும் ஒரு வாரத்தில் நல்ல மழைபெய்தால் அவரைக் குற்றவாளி இல்லை என்று தீர்மானித்து அவரை விடுதலை செய்வேன் என்றான். ஆத்மானந்தர் மறுநாளே ஆகமங்கள் விதித்தபடிப் பக்திசிரத்தையுடன் வருணஜெபம் செய்தார். அன்று இரவே இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. மகிழ்வுற்ற மன்னன் அவருடைய கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொண்டான். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரும்படி அமைச்சர்களுக்கு ஆணையிட்டான்.

அன்றிலிருந்து ஆத்மானந்தர் அடர்ந்த கானகத்தில் தனிமையில் வசிக்கத் தொடங்கினார். பழுத்த இலை நீண்ட நாட்கள் மரத்தோடு ஒட்டியிருப்பது அபூர்வம். நிலையற்ற, புதிர் நிறைந்த இந்த வாழ்க்கையிலிருந்து தனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி ஆண்டவன் அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார் ஆத்மானந்தர். அதற்குரிய வேளையும் நெருங்கி வந்தது. அன்று பிரம்ம முகூர்த்தமான பின்னிரவில் அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

"அன்பரே! உங்களுடைய கர்மங்கள் நிறைவுபெறும் தருணம் வந்துவிட்டது. நாளை சூரிய அஸ்தமனமாகும் வேளையில் மேரு மலையின் அருகே ஒரு ஜோதி தோன்றும். அதைக் குறியாக வைத்து ஐந்து கல் தொலைவு நடந்தால் நீங்கள் ஜோதியோடு ஜோதியாக ஒன்றி விடுவீர்கள்." என்று மிகத் தெளிவான குரலில் அருள்வாக்கு உரைத்தது. அதைக் கேட்ட ஆத்மானந்தர் ஆனந்தத்தில் தன்னிலை மறந்தார். அன்று முழுவதும் தியானத்திலேயே காலம் கழித்தார்.

இன்றுதான் அந்த அபூர்வமான நாள். அவரைக் காண மன்னனும், மந்திரி பிரதானிகளும் வந்தனர். அவர்களிடம் ஆத்மானந்தர் இறைவனின் ஆணையைக் கலக்கமின்றி எடுத்துரைத்தார். அனைவரும் கண்ணீர் சிந்தினர். அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். தங்களுடைய
சந்ததிகளுக்குத் துணை நிற்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். அனைவரையும் தன்னுடைய வசீகரமான குரலால் ஆறுதலளித்துப் பேசினார். மாலை நெருங்கியவுடன் அனைவரும் கண்ணீர் மல்கும் கண்களுடன் அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றனர்.

தன்னுடைய் இறுதிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆத்மானந்தர் தயாராக இருந்தார். சூரியன் அஸ்தமனமாகிச் சில நிமிடங்களிலேயே மேரு மலையில் ஜோதி தெரிந்தது. பரவசத்துடன் ஆத்மானந்தர் அதை நோக்கி நான்கு அடிகள் நடந்தார்.

திடீரென்று அவருக்கு எதிரே அகோர உருவத்தில் பேய்கள் வழிமறித்து நின்றன. அனல் தெறிக்கும் கண்களுடன், கலங்கிய வெள்ளை நிறத்தில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக வியாபித்து நின்றன. மேலும் ஒரு எட்டு கூட எடுத்துவைக்கவிடாமல் அவரைப் பின்னோக்கித் தள்ளின. தன்னுடைய முழுப்பலத்தைப் பிரயோகித்தும் முன்னேற இயலாமல் புயற்காற்றில் அகப்பட்ட துரும்புபோல ஆத்மானந்தர் சுருண்டு விழுந்தார் . கண்களை மூடித் தியானிக்க முயன்றார். ஆனால் மிகுந்த பதற்றத்தில் இருந்ததால் அவரால் ஒரு விநாடி கூட அதில் மனம் ஒன்ற முடியவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இது என்ன சோதனை என்று திகைத்தார். எத்தனையோ இன்னல்களை எதிர்கொண்டபோதும் மனந்தளராத அவர் தன் இறுதி நிலையில் பலம் அனைத்தையும் இழந்து கலவரப்பட்டார். சோர்ந்து போய் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தவேளையில் ஒரு மனிதன் அவர் அருகே வந்தான்.

"கும்பிடறேன் சாமி!"

"யாரது? உனக்கு என்ன வேண்டும்?"

"நான்தாங்க கசாப்பு கந்தசாமி. போனமாசம் கூட உங்ககிட்டே உதவிகேட்டு வந்தேனே ஞாபகம் இருக்கா?"

இப்போது அவன் ஞாபகத்திற்கு வந்தது. போனமாசம் தான் வளர்க்கும் ஆட்டிற்குக் கழிச்சல் நோய்க்காக அவரிடம் மருந்து வாங்கிக்கொண்டு போனான். அந்த நோய் நீங்கியவுடன் அதைக் கொன்று கறியாக்கிவிட்டான். இந்த நேரத்தில் இவன் எதற்காக இங்கு வந்தான்?

"உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? இந்த நேரத்தில் எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?"

"நான் உங்களைப் பாக்க வல்லீங்க. நான் என் கசாப்பு கடைக்குப் பக்கத்திலே ஒரு பிள்ளையாரை வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். தினமும் அதைக் கும்பிட்டபிறகுதான் வேலையை ஆரம்பிப்பேன். எனக்கு எல்லாமே அவர்தான். அவர் நேத்து என் கனவிலே வந்து 'நீ இதுவரைக்கும் வேலை பாத்தது போதுமடா. நாளைக்கு இருட்டினவுடனே மேக்கால போ. ஒரு ஜோதி தெரியும். அதைப் பாத்து நட. கொஞ்ச நேரத்தில நீ என்னோட ஐக்கியமாயிடுவேன்னு சொன்னாரு. அவரு சொன்னபடி இதோ நான் போய்க்கிட்டு இருக்கேன். சாமியைப் பாத்தவுடனே கையும் ஓடலே, காலும் ஓடலே. நீங்க எம்புட்டு பெரிய ஆளு. அதுதான் போறபோக்கில உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போகலாமின்னு நிக்கறேன்"

ஆத்மானந்தருக்குத் தூக்கிவாரிப்போட்டது. தன்னிடம் கூறப்பட்ட அதே வரிகள். இந்தப் புலையனும் நானும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறோமா? அந்த அளவுக்கா நாம் தாழ்ந்துபோய்விட்டோம்?

"அப்போ நான் வரட்டுமா சாமி? நேரமாச்சு" என்று அவரிடமிருந்து விடைபெற்றவன் விறுவிறுவென்று அவர் செல்லவிருந்த திசையில் நடந்தான். என்ன ஆச்சரியம்! அவரை வழிமறித்து நின்ற பேய்கள் அவனுக்கு ஒதுங்கி நின்று வழிவிட்டன.

ஆத்மானந்தரின் சமநிலை காற்றில் பறந்து கோபம் தலைக்கேறியது. ஆண்டவனிடம் வாய்விட்டுக் கதறினார்.

"இறைவா! எனக்கு ஏன் இந்த சோதனை? நினைவு தெரிந்த நாள் முதல் உன் பதமே கதி என்று வாழ்நாள் முழுவதும் காத்துக்கிடந்த எனக்கு ஏன் இந்த இழிநிலை? ஒரு புலையனுக்குக் கருணைகாட்டும் நீ உன் புதல்வனை ஏன் இப்படி வாட்டுகிறாய்? உன்னோடு இரண்டறக் கலக்கும் விதி எனக்கு இல்லை என்றால் அசரீரியாக வந்து சொல்லி என் மனத்தில் ஏன் ஆசையை விதைத்தாய்? நான் செய்த பாவம்தான் என்ன? முற்பிறவியில் நான் பாவம் செய்திருந்தால் எனக்கு ஏன் இத்தனை வரங்களை அளித்தாய்? எனக்குத் தீங்கு இழைத்தவர்களுக்குக் கூட நான் நன்மையே செய்திருக்கிறேன். எனக்கு ஆசைகாட்டி அவமானப்படுத்தியது ஏன்?" என்று ஆண்டவனிடம் கேள்விகளை அடுக்கினார்.

"சாமி ரொம்பக் கோபமா இருக்கேளோ?"

திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் இடையன் குறும்புத்தனமான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறான்.

அவனிடம் பதில் பேசும் மனநிலையில் அவர் இல்லை.

"நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே."

"என்ன பிரச்னைன்னு எங்கிட்டே சொல்லுங்க சாமி. முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்."

தன்னுடைய ஆதங்கத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மனப்பாரம் கொஞ்சம் குறையும்போலத் தோன்றியது. தன்னுடைய தகுதியை மறந்து ஒரு சிறுபிள்ளை போல அவனிடம் தன் முழுச்சரித்திரத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு முடித்தவுடன் அந்தச் சிறுவன் கலகலவென்று சிரித்தான்.

"இவ்வளவு படிசிருக்கீங்க. இதுக்குக்கூடவா உங்களுக்குக் காரணம் தெரியலே?"

"என்னப்பா உளறுகிறாய்? நான் செய்த குற்றம்தான் என்ன?"

"குத்தம் ஒண்ணும் இல்லை சாமி. முதல்லே நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க."

"கேள்.."

"முதல்லே உங்களை அஞ்சு வயசிலே சாமியாராப்போகச் சொன்னது யாரு?"

"யாருமில்லை அப்பா. நானாகத்தான் விரும்பித் துறவறம் ஏற்றேன்"

"சரி, இருக்கட்டும். இளவரசியோட விஷத்தை எப்படி இறக்கினீங்க?"

"சித்தர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடி நான் செயல்பட்டேன். உடனடியாகச் செயல்பட்டதால் அவளைக் காப்பாற்றினேன்"

"ரொம்ப நல்லது. ம்ழை எப்படி வந்துச்சு?"

"ஆகமவிதிகளின்படி வருணஜெபம் செய்தேன். மழை வந்தது"

"சரியாப் போச்சு. இப்படி எதை எடுத்தாலும் நாந்தான் செஞ்சேன், நாந்தான் செஞ்சேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா நீங்க எப்படி `அவன்'கிட்டே போய்ச் சேருறது? கசாப்புக்கடைக்காரன் செஞ்சது ஈனத்தொழிலா இருந்தாலும் "எல்லாம் அவன் செயல்"னு தன்னுடைய கர்மபலனை ஆண்டவனுக்கு அர்ப்பணிச்சுட்டான். தன்னுடைய கர்மங்களை ஆண்டவன் தனக்கு விதித்த கடமையாகத்தான் செய்தான். நீங்க இவ்வளவு படிச்சிருந்தும் ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்த வரங்கள் அத்தனையும் ஏதோ நீங்க பாடுபட்டுச் சேர்த்த சொத்துமாதிரி நினைச்சுக்கிட்டிருக்கீங்க. உங்களுடைய ஞானமும் அதன்மூலம் உங்களுக்குக் கிடைத்திருக்கிற போலி மரியாதைகளும், மாலைகளும்தான் உங்களைச் சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. ஆதையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு உங்களை ஆண்டவனோட பிரகிருதியா மட்டும் எண்ணிப்பாருங்க. நீங்க யாருன்னு உங்களுக்குத் தெரியும். நல்லா யோசிச்சுப் பாருங்க. வரட்டுமா சாமி?"

வந்தது யாரென்று ஆத்மானந்தருக்கு ஒரு நொடியில் புரிந்துவிட்டது. கர்ணனுடைய கவச குண்டலங்களின் வடிவில் அவனுடைய கர்மபலன்களை யாசகமாகப் பெற்று அவனுக்கு முக்தி அளித்த கிருஷ்ண பரமாத்மாதான் இடையன் வடிவில் தனக்குப் புத்திபுகட்டி தன்னை ஆட்கொள்ள வந்திருக்கிறான் என்பது அவருக்கு நிதர்சனமாக விளங்கியது.

அடுத்த நொடியில் அவர் ஜோதியோடு ஜோதியாகக் கலந்தார்.

No comments:

Post a Comment