முன்னொரு காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டில் (1984) சங்குணி, மங்குணி என்ற இரு நண்பர்கள் சென்னையில் வசித்து வந்தார்கள். அவர்கள் கூவமும், நாற்றமும் போல இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களுடைய குணங்கள் மட்டும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தன.
சங்குணி எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்று எண்ணுவதுடன் அதை அடைவதற்குத் திட்டமிட்டு உழைக்கவேண்டும் என்று நம்புபவன். +2 தேர்வில் கட் ஆப் மார்க் அரைமார்க் குறைந்தாலும், தேர்தலில் ஐம்பது ஓட்டே குறைவாக வாங்கியிருந்தாலும், கிரிக்கெட் மேட்சில் ஒரு ரன் குறைவாக எடுத்தாலும் இந்த உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த மதிப்பும், பலனும் கிடையாது என்று தெளிவாக அறிந்திருந்தான். அதனால் தன்னுடைய இலக்கு எதுவாக இருந்தாலும் அதில் முதலிடம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டிருந்தான். அதற்காக முழுமையாகத் திட்டமிட்டு உழைப்பான். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வான்.
மங்குணி இதற்கு நேர்மாறானவன். ஓர் அளவுக்குமேல் எந்த ஒரு நபரையும், இலட்சியத்தையும் முழுமையாகச் சார்ந்து இருக்கக்கூடாது என்று நம்புகிறவன். எல்லோருக்கும், எப்போதும், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதைக் கப்பென்று பிடித்துக்கொண்டு முன்னேறவேண்டும். ரித்திஷ் போன்றவர்கள் எம்.பி.யாவதும், மன்மோகன்சிங் பிரதமரானதும் இந்த வகையில் கிடைத்த உயர்வுதான். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளக்கூடாது. சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அப்போது என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். எது கிடைக்கவேண்டுமோ அது தானாகக் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன்.
கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் ஒரு நாள் இருவரும் பீச்சில் கடலை போட்டுக்கொண்டிருந்தார்கள். மங்குணிக்குச் சங்குணி அட்வைஸ் செய்தான்.
"இதுவரைக்கும் நீ மண்ணுளிப் பாம்பா இருந்தது சரி. இனிமே நீ இப்படி ஒரு முயற்சியும் எடுக்காமல் ஊர்சுற்றிக்கொண்டிருந்தால் உருப்படமாட்டே. இந்தக் காலத்திலே போய் பி.ஏ. எக்கானாமிக்ஸ் எடுத்துப் படிச்சிருக்கே. அதுக்கு உனக்கு எவன் வேலை கொடுப்பான்? ஒண்ணு டீச்சர் டிரையினிங் போ, அல்லது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சையாவது எழுது. என்ன நான் சொல்றது காதிலே விழுதா?"
"நல்லா விழுது. ஆனால் என்னுடைய பாணிதான் உனக்குப் புரியலே. நான் டீச்சர் டிரையினிங் படிச்சா ஒரு டீச்சராவதைத் தாண்டி என் மனசு மேலே போகாது. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதினா ஓர் அரசு ஊழியனாகவே என் வாழ்க்கை முடிஞ்சிரும். நான் தலைவர் மாதிரி தனி ரூட்டிலே போக ஆசைப்படறேன்."
"பெரிய ரஜினிகாந்த்னு நினைப்போ? உன்னோட படிப்புக்கும், உன் குடும்பத்தோட நிலைமைக்கும் நீ என்ன டாடா, பிர்லாவாக முடியும்னு நினைச்சுக்கிட்டிருக்கியா? அதெல்லாம் கதையிலேதான் நடக்கும். பேசாமல் பிழைக்கிற வழியைப் பாரு."
"எந்த ஒரு பணக்காரனும் பணக்காரனாகவே பிறந்தது இல்லைடா. பணக்காரன் ஏழையா மாறுவதுதான் வழக்கம். ஏழைதான் பணக்காரனா மாறுவான். வேணும்னா உனக்கும், எனக்கும் ஒரு பந்தயம் வைச்சுக்கலாம். இன்னிலேருந்து இருபத்து ஐந்து வருஷம் கணக்கு வைச்சுக்கோ. கரெக்டா இதே ஆகஸ்ட் 19ந் தேதி 2009ம் வருஷம் நாம் மீட் பண்ணுவோம். அப்போ யாருடைய ஆஸ்தி அதிகமா இருக்குன்னு பார்க்கலாம். உன்னைவிட அதிகமா நான் சம்பாதிச்சிருந்தா என்னுடைய பெயரை நீ வைச்சுக்கணும். இல்லேன்னா என் பெயரை நான் மாத்திக்கிறேன்."
"இருந்தாலும் உனக்குக் கற்பனைவளம் ரொம்ப அதிகமப்பா. எங்கப்பாவோட சொத்தே பல கோடி தேறும். நான் ஐ.ஐ.டி.யிலே படிச்சு முடிச்சிருக்கேன். அடுத்த மாதம் அமெரிக்கா போய் எம்.பி.ஏ. பண்ணப்போறேன். அதற்கப்புறம் பிஸினஸ் பண்ணப் போறேன். பி.ஏ.எக்கானாமிக்ஸ் படிச்சிருக்கிற நீ இதுக்குமேலே என்ன கிழிச்சிருவே?"
"பார்க்கலாம். ஞாபகமா டைரியிலே குறிச்சு வைச்சுக்கோ. ஆகஸ்ட் 19, 2009 அன்னிக்குப் பார்க்கலாம்."
மங்குணியின் சவாலைப் பற்றி சங்குணி அதிகமாகக் கவலைப்படாவிட்டாலும், அந்த சவாலை அவன் ஒரு நாள்கூட மறக்கவில்லை. தனக்குப் போட்டியாக ஒரு ஆள் இருக்கிறான் என்ற நினைப்பே அவனைத் தன்னுடைய முயற்சிகளில் இன்னும் தீவிரமாக இறங்கத் தூண்டியது. படிப்பு முடிந்தவுடன் எந்தத் துறையில் இறங்கலாம் என்று யோசித்தான். கம்ப்யூட்டர் அவனை மிகவும் ஈர்த்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதை வைத்துக்கொண்டு எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் விளங்கவில்லை. ஒரு முழத்துக்கு டாஸ் கமாண்டுகளை கீபோர்டில் அடித்துக்கொண்டே போனால் கடைசியில் நான்கும், ஐந்தும் ஒன்பது என்று விடைவரும். இதற்கு வாய்ப்பாடு போதுமே, இவ்வளவு விலையில் இத்தகைய சாதனங்கள் எதற்கு என்றே நினைத்தான். ஆனால் அப்போது பெங்களூரில் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், நிலேகனி என்ற நண்பர்கள் இந்தத் துறையில் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நேரில் சந்தித்து அந்தத் துறையின் சாதக, பாதகங்களைக் கேட்டு அறிந்தான். அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் அவனும் சங்குணி சொல்யூசன்ஸ் என்ற கம்பெனி ஆரம்பித்தான். அவனுடைய அமெரிக்க நண்பர்களின் தயவில் ஆர்டர்கள் குவிந்து லாபம் கொட்ட ஆரம்பித்தது. ஓ.எம்.ஆர். சாலையில் 10 கிரவுண்டில் பிரமாண்டமான கட்டிடம் எழுந்தது.
கிடைத்த எல்லா லாபத்தையும் ஒரே துறையிலேயே முடக்க அவன் விரும்பவில்லை. இன்னொரு துறையிலும் அவன் சிகரத்தை எட்ட விரும்பினான்.
2 X 4 சைஸில் கைக்கடக்கமாக இருந்த செல்போன் அவனைக் கிறங்கடித்தது. கம்ப்யூட்டருக்கு அடுத்து அசுர வளர்ச்சி காணக்கூடைய துறை இதுதான் என்று அவன் மனதில் கவுளி அடித்தது. கவர்மெண்டில் சர்வீஸ் புரவைடர் லைசன்ஸ் வாங்கித் தன்னிடம் மிச்சமிருந்த கோடிகளைக் கொட்டி செல்போன் டவர்களை நிறுவினான். வெகு சொற்ப காலத்திலேயே அவ்வளவு செலவுகளையும் தாண்டி லாபம் விண்ணைத் தொட்டது. எங்கேயும், எப்பொழுதும் பேசலாம் என்று ஆரம்பித்த தொழில்நுட்பம் கேமிரா, குறுஞ்செய்தி, டார்ச் லைட், இசை, வங்கிப்பரிமாற்றம் என்று பல துறைகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழில்நுட்பம் என்று வளர்ந்ததோடு பட்டி, தொட்டிகளிலெல்லாம் வேர் ஊன்றி ஆடு, மாடு மேய்ப்பவர்களிலிருந்து காய்கறி விற்கும் காமாட்சிகூட இடுப்பில் செருகிக்கொண்டு திரியும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது.
சாப்பாடு, தண்ணீருக்கு அடுத்து செல்போன் இல்லாமல் இருக்கமுடியாது என்று எண்ணுமளவு இன்றியமையாத, அத்தியாவசியப் பொருளாக மாறியது.
சங்டெல் கம்பெனி இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையிலும் கிளைபரப்பிச் சாதனை படைத்தது.
முதல் இரண்டு துறைகளில் கிடைத்த வெற்றியின் தாக்கத்தில் அவன் இன்னும் பல துறைகளில் அழுத்தமாகக் கால்பதிக்கத் திட்டமிட்டான். தி.நகரில் ஏழு அடுக்கு மாடிகளில் ஒரு ஜவுளிக்கடை, அதற்கு நான்கு கடைகள் தள்ளி ஒரு நகைக்கடை, பக்கத்திலேயெ பத்து அடுக்குமாடி வளாகத்தில் பாத்திரங்கள் முதல் செருப்புவரை விற்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஸ்டோர் என்று எல்லா சேனல்களிலும் பிரைம்டைம் ஸ்லாட்டில் விளம்பரம் செய்யும் அளவிற்குக் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தான்.
இடையில் ஒருநாள் மங்குணியைச் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் கரையை ஒட்டிப்பார்த்தான். மணல் லாரி டிரைவராகத் தன் நண்பனை டிராபிக் நெருக்கடியில் எதிரே பார்த்தும் பேசமுடியாத நிலைமை. பாவம் தனக்கு எதிராகச் சவால்விட்டு இப்படிச் சாதாரண டிரைவராகப் பிழைப்பு நடத்துகிறானே என்று மனதார வருந்தினான். அதற்கப்புறம் அவனைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மங்குணி என்னதான் செய்துகொண்டிருக்கிறான்?
சங்குணி பார்த்ததுபோல் மணல் லாரி டிரைவராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தான் மங்குணி. சில மாதங்களிலேயே அது எவ்வளவு பணம் காய்க்கும் தொழில் என்று புரிந்துகொண்டான். ஒரு கட்சி நடத்துவதற்கு அடிப்படை மூலதனம் மணல் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் மாமூல்தான் என்று அறிந்துகொண்டான். வெகுவிரைவிலேயே அந்த வியாபாரத்தை ஆட்டிப்படைக்கும் அதிகாரவர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் நம்பிக்கைக்குரிய புரோக்கராக மாறினான். ஆரம்பத்தில் ஆயிரம், பத்தாயிரம் என்று கைமாறிய தொகை சங்குணி போன்ற ஐ.டிக்காரர்களின் அவசரத்தேவைகளின் தயவில் லட்சங்களாக மாறி விரைவிலேயே கோடிகளைத் தொட ஆரம்பித்தது. இதற்கென்று தனியாக ஒரு ஈ.ஆர்.பி. சாப்ட்வேர் தேவைப்படும் அளவிற்கு வி.ஏ.ஓ.விலிருந்து தலைமைச்செயலகம்வரை ஒரு கனகச்சிதமான உள்கட்டமைப்பு உருவானது. அதை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அதன் மூளையாகவும், அசைக்கமுடியாத செயல்தலைவராகவும் இருப்பவர் மங்குணிதான் என்று யாருக்கும் தெரியாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் யார், யாருக்கு எவ்வளவு கொடுப்பது என்று தீர்மானிப்பது முதல், அதை மிகச் சரியாகப் பரிவர்த்தனை செய்வதுவரை மங்குணிக்குத் தெரியாமல் ஓர் அணுவும் அசையாது. வழக்கம்போல ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் பக்கம்பக்கமாக இதைப்பற்றிக் கவர்ஸ்டோரி போட்டார்கள். கடற்கரையில் வேர்க்கடலை சாப்பிட்ட ஜனங்கள் அதைப் படித்து ரசித்துவிட்டுக் கசக்கி எறிந்தார்கள்.
கைகளில் கோடிகள். அதை வீட்டில் வைத்திருக்கவோ, பேங்க் அக்கவுண்டிலோ போட முடியாத நிலைமை. இருக்கிற பணம் பத்திரமாக இருக்கவேண்டும். முடிந்தால் அதிலிருந்து வருமானம் வரவேண்டும். அதற்கு என்ன வழி? பராசக்தி திரைப்படத்தில் ஒரு பெண் விதவையானால் இட்லிக்கடைதான் அவளுடைய கதி என்ற நிலைமை இருந்ததைப்போல, மங்குணி மாதிரி ஆட்களுக்குப் பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. மங்குணி கல்வி அறக்கட்டளையின் சார்பில் விழுப்புரத்திற்குப் பக்கத்தில் இருநூறு ஏக்கர் சல்லிசாக வாங்கப்பட்டு ஆறுமாதத்திற்கு ஜே.சி.பி.யை வைத்துச் சமன்படுத்திச் சுவாமி விவேகானந்தர் சுயநிதிப் பொறியியல் கல்லூரி உருவானது. ஆந்திராவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் மாணவர்கள் சூட்கேஸ்களில் பணத்தைக் கொண்டுவந்து கொட்டி அட்மிஷன் வாங்கினார்கள். கவுன்சலிங் சமயத்தில் ஆனந்தவிகடனிலும், குமுதத்திலும் அதன் அருமை, பெருமைகளைப் புகழ்ந்து அது ஒரு விளம்பரம் என்று புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு நியூஸ் லேஅவுட்டிலேயே படங்களுடன் ஆறு பக்கத்திற்குச் செய்தி வெளியிட்டார்கள். ஆரம்பித்து ஆறு வருடங்களிலேயே அது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விஸ்வரூபம் எடுத்தது.
மங்குணியின் அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்று நான் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தேர்தலுக்குத் தேர்தல் தான் பைனான்ஸ் பண்ணும்பொழுது தான் ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. மொடமொடவென்று கஞ்சிபோட்டு அயர்ன் பண்ணப்பட்ட கதர்ச்சட்டை, கரைவேட்டி சகிதம் ஐம்பது லாரி ஆட்கள் அணிவகுப்புடன் ஆளுங்கட்சியில் ஐக்கியமானான். தலைவர் உத்தரவின் பேரில் பெயர் மட்டும் மங்கையர்க்கரசர் என்று மாற்றப்பட்டது. ஆளுங்கட்சியின் வாரிசுக்கு எடுபிடி வேலைபார்த்த புண்ணியத்தில் எம்.பி. சீட்டுக்கு டிக்கெட் கிடைத்தது. தேர்தலில் ஜெயித்து முதல்முறையாக விமானத்தில் முதல்வகுப்பில் டில்லிக்குப் பறந்தான்.
பத்து எம்.பி. சீட்டுகளைக் கையில் வைத்திருக்கும் மாநில ஆளுங்கட்சிக்கு அடித்தது யோகம். வழக்கம்போல காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டிக்கு எட்டு எம்.பி. சீட்டுகள் தேவையாக இருக்க, மாநிலக் கட்சியை இரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்றுக் கேட்ட துறையில் மந்திரிபதவியைக் கொடுத்தது காங்கிரஸ். மங்குணிக்கு, ஸாரி, மங்கையர்க்கரசருக்குக் கிடைத்தது தகவல் தொழில்நுட்பத்துறை கேபினட் அமைச்சர் பதவி. ரத்தன் டாடாவிலிருந்து, பில்கேட்ஸ்வரை அமைச்சரின் அப்பாயின்மெண்டுக்கு ஆலாய்ப்பறந்தார்கள்.
ஆகஸ்ட் 19ந் தேதி சங்டெல் எம்.டி.யிடமிருந்து மந்திரியின் அப்பாயிண்மெண்ட் கேட்டு விண்ணப்பம் வந்தது. சரியாக மாலை 5 மணிக்குத் தன்னைவந்து பார்க்கும்படி மங்கையர்க்கரசர் பதில் அனுப்பினார்.
சரியாக மாலை 5 மணிக்குச் சங்குணி மந்திரியின் அறையில் நுழைந்தார். அவரை ஆரத்தழுவி வரவேற்றார் மங்கையர்க்கரசர் என்ற மங்குணி. புன்னகையுடன் தன் நண்பனிடம் கேட்டார் மங்குணி.
"நண்பா! என்னுடைய சவால் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?"
"இருக்கிறது. நீ என்னை மங்குணி என்றே கூப்பிடலாம். அது மட்டுமில்லை..."
ஒரு விநாடி அமைதிக்குப்பின் சங்குணி தொடர்ந்தார்.
"இந்த நாட்டின் பெயரையும் மங்குணிப்பிரதேசம் என்றே மாற்றிவிடலாம்"
19-08-2009
American Ultra (2015)
8 years ago
No comments:
Post a Comment