Wednesday, July 22, 2009

செந்தில் சிரிப்பாரா?

கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? சிரிக்கப்போவது யாரு? - இந்த வரிசையில் மிமிக்ரி கோவிந்தனை டி.வி.யில் நீங்கள் நிச்சயம் காணலாம் . இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு. இப்போது ஐயா கீழ்ப்பாக்கம் கல்லறைத்தோட்டத்துப்பக்கம் உள்ள ஒரு மரத்தடி ஜொசியரிடம் எண் சாஸ்திரப்படி தனது பெயரை எப்படி மாற்றியமைத்தால் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என்று ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"தம்பி! உனக்கு இப்போது கிரகசாரம் சரியில்லை. நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காதே. இப்போ உனக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும். அரிச்சந்திரன் ரேகை அப்படியே உனக்கு அமைஞ்சிருக்கு. உன் வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கணும். வருகிற தை பிறக்கற வரைக்கும் எதுவும் கைகூடி வர்றது சாத்தியமில்லை. தை பிறந்தவுடனே வா. உனக்கு ஒரு சூப்பர் பெயரா சூஸ்பண்ணித் தாரேன். இப்போ வீட்டுக்குப்போய் நிம்மதியா படுத்து உறங்கு. நீ எனக்குக் காசுகூடக் கொடுக்கவேண்டாம். நீ இப்போ போய் நான் சொன்ன நேரத்திலே வா தம்பி!"

ஜோசியர்கூட கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளாத குறையாகப் புறக்கணிக்கும் கேவலமான நிலைமையில்தான் இருக்கிறோம் என்ற அவமானத்தில் அவனுக்கு ஊமைக்கோபம் வந்தது. மௌனமாக அங்கிருந்து நகர்ந்தான்.

மேலே செல்வதற்கு முன்னால் அவனுடைய பயோடேட்டாவைச் சற்றுப் பார்க்கலாமா?

பெயர்: எம்.ஜி. என்கிற மிமிக்ரி கோவிந்தன் என்கிற கோவிந்தசாமி.

ஊர்: அன்று சங்கப் புலவர்களையும் இன்று சினிமா கலைஞர்களையும் ஈன்றுவரும் மதுரை மாநகரம்.

கனவு: வடிவேலு பிறந்த ஊரிலேயே பிறந்து, வடிவேலுவைப் போலவே சரக்குலாரியில் சென்னை சென்று, அவரைப்போலவே சினிமாவில் காமெடியனாக ஜொலித்து நிறையப்பணத்தை அள்ளவேண்டும்.

திறமை: ஜெயந்திபுரத்தில் கேட்டுப்பாருங்கள். மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றும் விழாவாக இருந்தாலும் சரி, அண்ணன் அழகிரி பிறந்தநாளாக இருந்தாலும் சரி அவனுடைய காமெடி இல்லாமல் எந்த விழாவும் நடந்ததில்லை. அவனுக்கு அங்கே தனியாக ரசிகர் மன்றம் கூட உண்டு என்றால் நம்புவீர்களா? "நீயெல்லாம் சினிமாவுக்குப் போகணும்பா. வடிவேலுவும், விவேக்கும் வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுவாங்க" என்று பில்டப்கொடுத்து அவனைக் கோடம்பாக்கத்துக்கு விரட்டிவிடும் அளவுக்குச் சொந்த ஊரில் பேரும்புகழும் இருந்தது. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவில் அவன்செய்த சேட்டைகளைப் பார்த்துச் சட்டையைக்கழட்டிவிட்டுச் சிரித்த ஒரு கூட்டத்தைப்பற்றிப் பத்திரிக்கைகள் பக்கம்பக்கமாக எழுதியதைப் பார்த்தவுடன் இதுதான் என் தொழில் என்று முடிவுபண்ணிவிட்டான்.

திருமணம்? ஆகிவிட்டது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவதுபோலவே ஒரு தாவணி மங்கை ஓரக்கண்ணால் சைட் அடித்துச் சுற்றிச்சுற்றி வந்தாள். வலியவந்து காதல்சொல்லி மனதைத்தொட்டாள். சில நாட்கள் தயக்கத்திற்குப்பின் ஒருநாள் அம்மன் கோவிலில் நண்பர்கள் சாட்சியாகத் திருமணம் நடந்தது. அவனுக்கு இப்போது சுமையும் அதுதான். சுகமும் அதுதான்.

குழந்தை? உருவாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் ரிலீஸ்.

இருப்பிடம்? வளசரவாக்கத்தில் ஒரு பிரபல் இயக்குநரின் பிரம்மாண்டமான பங்களாவை ஒட்டிய ஒரு குடிசைவீடு. உபயம்: அவர்கள் வயிற்றைக் கழுவுவதற்காக அவன் மனைவி வேலைபார்க்கும் வீட்டிற்குச் சொந்தக்காரரான ஒரு கவுன்சிலர் தன்னுடைய கோட்டாவில் போட்டுக்கொடுத்தது.

வேலை? பொய் சொல்வது. கல்யாணப்பரிசு தங்கவேலுவைப்போல தினமும் டிபன்பாக்ஸ் சகிதம் வெளியே கிளம்பி ஊரைச்சுற்றிவிட்டு இன்று அஜித் பட சூட்டிங், விஜய் படத்தில் ஒரு மாஸ் சீன் என்று ரீல்விட்டுவிட்டு அலுப்புதீர வெந்நீரில் குளியல்போடுவது.

வருமானம்: இரவு. கொச்சையாகச் சொன்னால் பிச்சை. தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சென்று கையேந்துவது. அவர்களும் அவனை முழுவதுமாகப் புறக்கணிக்கமுடியாமல் இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்ற எச்சரிக்கையோடு 100, 200 என்று கொடுத்து உதவுவது.

பயோடேட்டா அவ்வளவுதான். இனிமேல் கதைக்கு வரலாம். ஊரைச் சுற்றிவிட்டு அவன் வீடுபோய்ச் சேர்ந்தபோது மணி எட்டாகிவிட்டது. எளிமையிலும் அழகாக ஜொலித்தாள் அவன் செல்லம்.

"செல்லம். இன்னிக்கு சூப்பர் சீன்மா. லஞ்ச் பிரேக்கில் அந்த ஆர்த்தி பொண்ணு பண்ணின அலம்பல் இருக்கே.. யூனிட்டே அலறிடுச்சு போ."

"ஏங்க! நான் உங்ககிட்டே இன்னிக்கு எங்கே வேலைக்குப் போனீங்க, என்ன சம்பளம் வாங்கினீங்கன்னு எப்போதாவது கேட்டிருக்கேனா?உங்ககிட்டே ஆயிரம் திறமை இருக்கு. ஆயிரத்து ஒண்ணாவதா எதுக்குங்க இப்படிப் பொய்சொல்றது. உங்களுக்குச் சான்ஸ் கிடைச்சு நீங்க வேலை செய்றவரைக்கும் நான் வேலைக்குப்போய் உங்களைக் காப்பாற்றுவேன். பொய் மட்டும் சொல்லாதீங்க, பிளீஸ்!"

அவனுக்கு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

"ஏங்க! வெளியே போகும்போது செல்லை எடுத்துக்கிட்டுப் போகமாட்டீங்களா? யாரோ ஒருத்தர் நாலு தடவை போன் பண்ணிட்டார். நிச்சயமா அது நீங்க கடன் வாங்கினவர் இல்லை. இருந்திருந்தா நீங்க பெயரைப் பதிஞ்சு வச்சிருப்பீங்க. இது வேற யாரோ ஒரு ஆளு. கொஞ்சம் யாருன்னு பாருங்க."

போன் நம்பர் புதிதாக இருந்தது. வந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.

"டேய் கோவிந்தா. நான் ரத்தினம்டா. எப்படிடா இருக்கே?"

ரத்தினம் அவன் கோஷ்டியில் ரிங் லீடர். நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது பிட்டுப்போட்டு சுதி ஏற்றிக்கொண்டே இருப்பான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அவன் தோளன். அதாவது அவனைத் தோளில் தூக்கிச் செல்பவன். பாவம் பத்தாவதுக்குமேல் படிக்கமுடியாமல் சென்னைக்குத் துரத்தப்பட்டவன்.

"டேய் நான் உன்னை விஜய் டிவியிலே பார்த்தேண்டா. ஊருக்குப் போன்போட்டு உன் நம்பரை வாங்கினேன். டேய் நான் இங்கே ஒரு டைரக்டர்கிட்டே ஆபீஸ்பாயா இருக்கேன். அவரு நம்மூருடா. புதுசா ஒரு படம் பண்றார். உன்னை மாதிரி ஒரு கேணயன் அவர் படத்துக்குத் தேவைப்படுது. நான் உன்னைப் பத்திச் சொன்னேன். அவரு விஜய் டி.வி.லேருந்து சி.டி. வாங்கிப்பாத்துப்புட்டு உடனே உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாருடா. நீ உடனே ஆட்டோபுடிச்சு நான் சொல்ற இடத்துக்குப் போ. நிறைய ஆளுங்க மோதுறாங்கப்பா. சான்ஸை மிஸ் பண்ணிடாதே"

பசி, சாப்பாடு அனைத்தையும் துறந்துவிட்டு உடனே சாலிகிராமத்திற்கு விரைந்தான். அங்கே கூர்க்கா வாசலில் அரைமணி நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினான்.

டைரக்டர் த்னபாலன் அவனைச் சோபாவில் உட்காரச்சொன்னார். இதுவரை எந்த இயக்குனரும் கொடுக்காத கௌரவம் அது. புதிதாக சான்ஸ்கேட்டு வருபவர்களை லாக்கப் கைதிகளைப்போல்தான் அவர்கள் பொதுவாக நடத்துவார்கள்.

"கோவிந்தன் உங்களோட அட்டிட்யூட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால் இந்தப் படத்திலே இது ஓர் முக்கியமான ரோல். கிட்டத்தட்ட ஹீரோவுக்குப் பேரலலா படம் முழுக்க வரும். அதனால தயாரிப்பாளரை நீங்க கன்வின்ஸ் பண்ணினாத்தான் நான் உங்களை கன்பர்ம்பண்ண முடியும். அவர் காரைக்குடிச் செட்டியார். ரொம்ப வருஷமா டிஸ்ட்ரிபியூட்டரா இருந்த அவர் எடுக்கப்போற முதல்படம் இது. இந்த ரோலை ஒரு புதுமுகத்துக்குத்தான் கொடுக்கிறதுன்னு நாங்க முடிவு செய்திருக்கோம். அவரைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு அவர் ஒரு வித்தியாசமான போட்டி வச்சிருக்காரு. அதிலே ஜெயிச்சிட்டீங்கன்னா நிச்சயமா அந்த ரோல் உங்களுக்குத்தான். இதுவரைக்கும் கிட்டத்தட்ட நாற்பது பேருக்குமேல டிரையல் எடுத்திருக்காங்க. ஆனால் இதுவரைக்கும் யாருமே ஜெயித்ததில்லே. "

"போட்டின்னா எனக்கு அல்வா சாப்பிடறதுமாதிரி சார்! காலேஜிலே நான் கலந்துக்கிட்ட எந்த போட்டியிலேயும் பரிசு வாங்காமல் வெளியே வந்ததில்லை. இந்தப் போட்டியை நான் ஒரு சவாலா எடுத்துக்கிறேன். நான் தோற்றுவிட்டால் பேசாம சொந்த ஊருக்கே திரும்பப் போயிடறேன். அது என்ன போட்டி, நான் அவரை எப்போ மீட் பண்ணலாம்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்"

இயக்குனர் தயாரிப்பாளருக்கு மொபைலில் அழைப்பு விடுத்தார். பின் அவன் பக்கம் திரும்பினார்.

"நாளைக்குக் காலையிலே பத்துமணிக்குச் சவேரா ஓட்டல் போங்க. அங்கே தயாரிப்பாளரும், ஒரு பிரபலமான காமெடி நடிகரும் இருப்பாங்க. அவஙக உங்களுக்கு அரைமணி நேரம் டைம் கொடுப்பாங்க. அந்த அரைமணி நேரத்திற்குள்ளே அந்த காமெடி நடிகரை நீங்க சிரிக்க வைக்கணும். இதை நீங்க லேசா நினைச்சுடாதீங்க. அவர் ரொம்ப அழுத்தமான ஆளு. டைமிங், கான்செப்ட் எல்லாம் ரொம்பப் பிடிச்சாத்தான் அவரு ஸ்மைலே பண்ணுவாரு. அவர் கலகலன்னு சிரிச்சாத்தான் உங்களுக்கு சான்ஸ். போய் நைட்ல ரிகர்சல் எடுத்துக்கிட்டுக் காலையிலே அவங்களைக் கரெக்டா சொன்ன நேரத்துக்குப் போய்ப்பாருங்க. ஆல் த பெஸ்ட்"

அவனிடம் கைகுலுக்கி அனுப்பிவைத்தார்.

அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்கவே இல்லை. இதுவரை தனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த ஐட்டங்களையெல்லாம் இன்னும் மெருகுபடுத்தி ரிகர்சல் செய்து பார்த்தான். அதிகாலைக்குள் அரைமணி நேரம் அளவில் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளை மனதிலேயே ஒழுங்குபடுத்தியிருந்தான்.

செல்லம் கோவிலுக்குப்போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தாள். அவன் கிளம்பத்தயாரானான். திடீரென்று செல்லத்தின் முகம் இறுகியது.

"ஐயோ வயிற்றுவலி தாங்கமுடியலையே" என்று தரையில் சரிந்து விழுந்து சாய்ந்தாள். அடிவயிற்றிலிருந்து வலி கிளம்பியதால் இது பிரசவவலிதான் என்று இருவரும் புரிந்துகொண்டார்கள்.

"என்னை ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு நீங்க தயாரிப்பாளரைப் பார்க்கப் போங்க" என்று அந்த வலியிலும் அவனுக்கு ஆதரவாக இருந்தாள்.

கொவிந்தனுக்குக் கண்ணைச் செருகியது. கையில் இருக்கும் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவனுக்கு இந்த நேரத்தில் யார் உதவிசெய்வார்?

பளிச்சென்று கமலாக்காவின் நினைவு வந்தது. கமலாக்கா வீடு அந்த ஏரியாவிலேயே மிகவும் பிரபலம். வயதாகிப்போன அல்லது வாய்ப்பில்லாத துணைநடிகைகளின் சரணாலயம்தான் அவள் வீடு. எந்த நேரத்திலும் வெள்ளையும், சொள்ளையுமான வாடிக்கையாளர்களின் கார்கள் அடைத்துக்கொண்டு மிகவும் பிஸியாக இருக்கும். அவனை சூட்டிங் ஸ்பாட்டுகளில் அடிக்கடி பார்ப்பாள். பொது இடங்களில் மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வுடன் அவளை முற்றிலும் தவிர்க்கும்பொழுது அவன் அவளுடன் பாசக்காரத்தம்பி போல இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பான். ஒரு வாடிக்கையாளராக அவள் வீட்டு வாசற்படியை மிதிக்காவிட்டாலும் அவளுக்குத் தேவையான பொருட்களை ரேஷன் கடையிலிருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பது போன்ற சில எளிய உதவிகளைச் செய்வான். இன்றைய நிலையில் இப்போது அவனுக்குத் தெரிந்த ஒரே நபர் அவள்தாம். கமலாக்காவிடம் பணத்துக்குமட்டும் எப்போதும் பஞ்சம் இருக்காது. பின்புறமாகச் சென்றால் இரண்டு நிமிடங்களில் அவள் வீட்டுக்குப் போய்விடலாம். செல்லத்தைக் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு கமலாக்கா வீட்டுக்கு ஓடினான்.

ஏனோ அன்று அவள் வீடு நிசப்தமாக இருந்தது. வேறு யாரும் இல்லை.

"அக்கா! ஒரு உதவி பண்ணணுமே" என்று எந்தவித தயக்கமுமின்றி தன்னுடைய நிலையை அவளுக்கு எடுத்துச் சொன்னான்.

"தம்பி! இதுவரைக்கும் உன்னை என் சொந்தத் தம்பியாத்தான் நினைச்சுப் பழகியிருக்கேன். உனக்கு இப்படி ஒரு உதவி செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதுக்கு நான் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். உன் மனைவியோட பிரசவத்தை நான் பார்த்துக்கிறேமபா. நீ சான்ஸை மட்டும் விட்டுவிடாதே. உடனே கிளம்பு. உன் வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்லி அவன் வயிற்றில் பால் வார்த்தாள் கமலாக்கா.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸில் செல்லமும், கமலமும் கிளம்ப அவன் சிட்டிபஸ்ஸில் சவேரா ஓட்டலுக்குச் சென்றான்.

ரிசப்சனில் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இருக்கும் அறை எண்ணைச் சொன்னார்கள். அங்கு அவருடன் அமர்ந்திருந்த நபரைப்
பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான்.

செந்தில்!

யாருடைய காமெடி அவனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததோ, யாருடைய கிளிப்பிங்ஸ் எல்லாத் திரைகளிலும், ஆம்னி பஸ்களிலும், வீடுகளிலும் கலகலக்கவைத்ததோ அவர் அவன் எதிரில். இவரைத்தான் நான் சிரிக்கவைக்க வேண்டுமா?

"உன்னைப்பற்றி தனபால் சொன்னார். இருந்தாலும் நீ புது ஆளா இருப்பதாலும், படத்திலே இந்த ரோல் ரொம்ப முக்கியமா இருப்பதாலும் இந்த டெஸ்டு வைச்சிருக்கோம். இப்போ மணி 10:30. 11மணிக்குள்ளே உன் காமெடியைப் பார்த்து இவர் சிரிச்சிட்டாருன்னா இந்தப் படம் உனக்குதான். இப்பவே உனக்குப் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருவேன். இன்னும் ஒரு மாதத்திலே சூட்டிங் ஆரம்பமாயிரும். நீ ரெடியா? ஸ்டார்ட் பண்ணு"

அப்போதுதான் செந்திலின் முகத்தைப் பார்த்தான். அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பட்டிதொட்டியெல்லாம் பார்த்துச் சிரித்த முகமா இது?
சோப்புப்போட்டதைப் போல முகம் முழுவதும் சோகம் அப்பியிருந்தது. சார்லி சாப்ளினைப்போல எல்லாக் காமெடியர்களுடைய சொந்த வாழ்க்கை முழுவதும் சோகம்தானோ? உதிர்ந்து விழுந்த தேங்காய் மட்டைபோல சோகத்தின் சின்னமாக உட்கார்ந்திருந்தார்.

அவன் தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்தான். தன்னுடைய மொபைலிருந்து ஒரு பாட்டை ஓடவிட்டான். குன்னக்குடியின் வயலின் இசை அது. "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாட்டை அவர் வயலினில் இசைக்கும்பொழுது எப்படியெல்லாம் முகபாவம் காட்டுவார் என்று ஒவ்வொரு அட்சரத்திலும் அபிநயம் பிடித்துக் காட்டினான். இதுபோல ஒரு நிகழ்ச்சியை மதுரையில் அவன் குழுவாகச் செய்தபொழுது மதுரையே அதிர்ந்தது. தில்லானா மோகானாம்பாளின் "நலந்தானா" பாடலை அவன் குழுவினர்கள் டி.எஸ்.பாலையா சகிதம் அபிநயம் பிடிக்க அவன் சிவாஜியைப்போல நாகஸ்வரம் வாசிக்க, ஒரு நங்கை நாட்டியம் ஆட கடைசியில் பாட்டு முடியும்போது பாட்டையே மாற்றி "நாக்குமுக்கு" பாட்டுக்கு மாற, முழு நாட்டிய உடையில் அந்தப் பெண்ணும் குத்து நடனம் ஆட, நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம்வரை மதுரை மக்கள் அந்தக் காமெடியை நினைத்து, நினைத்துச் சிரித்தார்கள். அங்கே குழுவாகச் செய்தபோது கலக்கிய காமெடி இன்று சோலாவாகச் செய்தபொழுது அவனுக்கே பிசிறடித்தது. இருந்தாலும் நன்றாகச் செய்ததாகவே நினைத்தான். ஆனால் என்ன பிரயோஜனம்? செந்தில் பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி அமர்ந்திருந்தார். தயாரிப்பாளரோ அரைத்தூக்கத்தில் தவம் இருந்தார்.

மூன்றாம் பிறை கமல் போல பானையை வைத்துக்கொண்டு நடித்துக்காட்டினான். கலைவாணர் என்.எஸ்.கே., மதுரம் இணைந்து பாடிய "சிரிப்பு"
என்ற பாடலை அப்படியே செய்துகாட்டினான். திருவிளையாடல் சிவாஜி - நாகேஷ் டயலாக்கை சிவாஜிக்குப் பதிலாக ரஜினி பேசினால் எப்படி இருக்கும் என்று நடித்துக்காட்டினான். புன்னைகை மன்னன் சார்லிசாப்ளின், அபூர்வ சகோதரர்கள் குள்ளக்கமலாக மாறினான். ஊகூம். எதற்கும் இருவரும் அசைந்துகொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஐட்டம் பண்ணும்போதும் அங்கு செல்லத்திற்கு என்ன ஆகுமோ என்ற எண்ணம் அவன் மனத்தில் பீதியைக் கிளப்பியது. என்ன இருந்தாலும் கமலா ஒரு விலைமாது. சட்டத்திற்குக் கட்டுப்படாதவள். குழந்தை பிறந்தவுடன் அதைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டால்? பிரசவத்தில் ஏதாவது சிக்கல் நேர்ந்தால்? கடவுளே இந்த நேரத்திலா நான் இங்கே கூத்தடிக்கவேண்டும்?

இன்னும் பத்து நிமிடங்கள்தான் மீதம் இருந்தது. டக்கென்று ஒரு ஐடியா அவன் மனதில் உதித்தது.

"செந்தில் ஐயா! அடுத்து வர்ற காமெடி நீங்க சம்பந்தப்பட்டது. அதிலே கவுண்டமணி ஐயா உங்களைத் திட்டறது மாதிரி வரும். நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கப்படாது"

"அவர்கிட்டே நான் வாங்காத அடியும், உதையுமா? நீ என்ன வேணாலும் பண்ணு. நான் எதையும் தப்பா எடுத்துக்கிடமாட்டேன்"

"நன்றி ஐயா! நீங்க அவசரமா போய்க்கிட்டு இருக்கீங்க. அப்போ கவுண்டமணி உங்களை வழிமறிக்கிறார் - "

"வழிவிடுங்கண்ணே. நான் அர்ஜெண்டா ஒரு வேலையாப் போய்க்கிட்டு இருக்கேன்"

"சிங்கம்தாண்டா சிங்கிளாப் போகணும். உன்னை மாதிரிப் பண்ணியெல்லாம் பத்து குட்டியோட போனாத்தாண்டா கௌரவம். நில்லுடா நானும் வர்றேன்"

"கிண்டல் பண்ணாதீங்கண்ணே. எனக்கு வேலை இருக்கு. நான் போகணும்"

"அப்படி என்னடா பொல்லாத வேலை? பெரிய கவர்னர் உத்தியோகம் பாக்குறியா?"

"100 ரூவாய்க்கு சில்லரை மாத்தணும்னே. ரொம்ப அர்ஜெண்ட்"

"அப்படி வா. இதுக்கு எதுக்குடா ஏரோப்ளேனைப் பிடிக்கற மாதிரிப் பறக்குறே. என்கிட்டே கேட்டா நான் தரமாட்டேனா? நூறு ரூபாய்க்குப் போதுமா அல்லது ஆயிரம் ரூவாய்க்குத் தரட்டுமா"

"நூறு ரூவாய்க்குப் போதும்ணே. இரண்டு அம்பது கொடுத்தா கூடப்போதும்"

"அதனால என்னடா? கொடுத்தாப் போச்சு. இந்தா இரண்டு அம்பது. உன் நூறை வெட்டு"

"இந்தாங்கண்ணே. சரியான சமயத்திலே உதவினீங்கண்ணே. உங்களை ஆயுசு முழுக்கும் மறக்கமாட்டேன். நான் வரட்டுமா?"

"நல்லாரு. அட கொஞ்சம் நில்லு. நான் கொடுத்த நோட்டைக் கொடு. நோட்டில கவர்னரு கையெழுத்து இருக்கான்னு பாத்துட்டுத் தர்றேன்."

"நல்லாப் பாத்துக் கொடுங்கண்ணே. கள்ளநோட்டா இருக்கப்போவுது."

கவுண்டமணி இரண்டு நோட்டுகளையும் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு ஒரு அம்பது ரூபாய் நோட்டை மட்டும் திருப்பிக் கொடுக்கிறார்.

"கையெழுத்தெல்லாம் சரியா இருக்கு. நீ போயிட்டு வா."

"என்னண்ணே ஒரு அம்பது மட்டும் திருப்பிக்கொடுக்கறீங்க. இன்னொண்ணு?"

"நீ எங்கிட்டே எவ்வளவு கொடுத்தே?"

"100 ரூவா"

"நான் உங்கிட்டே எவ்வளவு கொடுத்தேன்?"

"ரெண்டு அம்பது. அதைத்தான் திருப்பி வாங்கிட்டீங்களே?"

"அட அதை நான் மறுபடியும் திருப்பிக்கொடுத்திட்டேன்லடா"

"ஆமண்ணே. ஒரு அம்பது கொடுத்திருக்கீங்க. இன்னொண்ணு?"

"அட இன்னொண்ணுதாம்பா இது. அடப் பரதேசி. எங்கிட்டே அன்னிக்கு அம்பது பைசா முழுங்கிட்டு வாழைப்பழம் வாங்கித் தின்னேல, அதுக்கு வட்டியும் முதலுமா எடுத்துக்கிட்டேன் போ. இந்தக் கவுண்டனை யாருன்னு நினைச்சே? நீ எமலோகத்துக்கே போனாலும் அங்கேயும் உன்னை விடமாட்டேன்!"

இதற்கும் அவர்களிடம் எந்த ரியாக்சனும் இல்லை. கோவிந்தன் ஓய்ந்துவிட்டான். இதற்குமேல் சத்தியமாக அவனிடம் சரக்கு இல்லை.

இதுவரை அமைதியாக இருந்த செந்தில் திடீரென வெடிச்சிரிப்பு சிரித்தார். தூக்கத்திலிருந்த தயாரிப்பாளர் பதறி எழுந்தார்.

"அண்ணே! அந்த ரோலை இவருக்கு நீங்க கொடுக்கலாம்ணே. பையன் நிச்சயமா நல்லா வருவான்" என்று அவனுக்கு சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரின் செல்போன் சிணுங்கியது. பேசுவதற்காகத் தனியே சென்றார்.

செந்தில் கோவிந்தனைத் தட்டிக்கொடுத்தார்.

"என்னை மன்னிச்சிடப்பா. இதுவே ஒரு சாதாரண மனுசனா இருந்தா எப்பவோ சிரிச்சிருப்பான். ஆனா என்னை மாதிரி ஆளுங்க பொய்யாச் சிரிச்சுச் சிரிச்சு நடிச்சதினாலே உண்மையான சிரிப்புன்னா என்னங்கறதே மறந்துபோச்சு. உனக்கு நல்ல திறமை இருக்கு. நீ நிச்சயம் மேலே வருவே"

2 comments:

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

கோவி.கண்ணன் said...

சிறப்பாக எழுதி இருக்கிங்க ஐயா,

சிறுகதைகளில் பல தகவல்களும் சேர்த்து சொல்லி கதையோடு ஒட்டி வருவது போல் எழுதுவது கடினம். உங்களுக்கு அது மிக இயல்பாக வந்திருக்கிறது.

பாராட்டுகள் !

Post a Comment